அகமதாபாத்: பிரதமர் மோடியின் பட்டப் படிப்புகல்விச் சான்றிதழ் நகல்களை பிரதமர் அலுவலகம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வழங்க உத்தரவிடக் கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் (சிஐசி), பிரதமர் மோடியின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு சான்றிதழ் விவரங்களை வழங்குமாறு, பிரதமர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களின் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, தனி நீதிபதி பிரேன் வைஷ்ணவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ், தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்களை பிரதமர் அலுவலகம், குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்கள் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.
மேலும், பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரி மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி பிரேன் வைஷ்ணவ் அறிவித்தார்.