கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றது வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி வேலூர் கோட்டைக்கு இஸ்லாமிய பெண்கள் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அந்த பெண்களிடம் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனவும் ஹிஜாபை அகற்ற வற்புறுத்தியுள்ளனர்.
இதனை அந்த பெண்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த விவகாரம் வேலூர் மாவட்ட போலீசருக்கு தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையின் பேரில் இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை அகற்ற கூறிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வீடியோவை வேறு எங்கும் வெளியிடக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வேலூர் கோட்டையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சோதனை நடத்தினர். இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றசொல்லி வீடியோ எடுத்த விவகாரத்தில் 7 பேர் கைதான நிலையில் இன்று முதல் சோதனை நடத்தப்பட்டது. மேலும் வேலூர் கோட்டைக்கு வரும் காதலர்களின் விவரங்களையும் காவல்துறை பதிவு செய்ய உள்ளது.