ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை 6 மணியளவில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட துணைத் தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பிரகாசம், பொருளாளர் ராஜூ, அமைப்பு செயலாளர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் யுகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், பயணப்படியை 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். வருவாய் கிராமங்களை பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்கவேண்டும். வருவாய்துறை பணிகளைத் தவிர, பிற துறை பணிகளை விஏஒக்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.