புதுடில்லி, கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான தேர்தல் பத்திர விற்பனையை, நாளை மறுதினம் முதல் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்தில், தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை, மத்திய அரசு 2018ல் அறிமுகப்படுத்தியது.
நம் நாட்டைச் சேர்ந்த தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு அதை நன்கொடையாக அளிக்கலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
தற்போது கர்நாடக மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 10ல் ஓட்டுப் பதிவும், 13ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கவுள்ளன.
இதையடுத்து, 26வது தேர்தல் பத்திர விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதன்படி, வரும் 3 – 12ம் வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட, 29 கிளைகளில் மட்டும் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பதிவான மொத்த ஓட்டுகளில் குறைந்தது, 1 சதவீத ஓட்டுகளை பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், இந்த தேர்தல் பத்திர நன்கொடை பெற தகுதிஉடையவை.