சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது.
விடுதலை முதல் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதனால் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், அது எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
விடுதலை முதல் பாகம்
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பொலிட்டிக்கல் ஜானரில் எளிய மக்களுக்கான யதார்த்த அரசியலை பேசியுள்ள விடுதலை படத்திற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தையும் வளத்தையும் சுரண்ட நினைக்கும் அரசுக்கு எதிராக போராடும் வாத்தியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இரண்டாம் பாகம் எப்படி இருக்கும்
விஜய் சேதுபதியையும் அவரது நண்பர்களையும் தேடும் காவல்துறையில், ஒரு சாதாரணாக போலீஸாக நடித்துள்ளார் சூரி. வெள்ளந்தியான அவரது இயல்பான நடிப்பு தான் விடுதலை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. சூரி தனது காதலி உட்பட மற்ற பெண்களை காப்பாற்றுவதற்காக விஜய் சேதுபதியை விரட்டிப் பிடிப்பதோடு முடிகிறது முதல் பாகம். அதன்பின்னர் தான் விடுதலை படத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் அரங்கேறவுள்ளது. அதற்கான லீட் முதல் பாகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில் குண்டு வெடிப்புக்கு யார் காரணம்?
விடுதலை படத்தின் முதல் காட்சியில் ரயில் விபத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக கதை தொடங்குகிறது. அதற்கு காரணம் விஜய் சேதுபதியும் அவரது தோழர்களும் தான் காரணம் என போலீஸார் விசாரணையை தொடங்குகின்றனர். சூரியும் அதுவே உண்மை என நம்புகிறார், ஆனால், இரண்டாம் பாதியில் ரயில் விபத்துக்கு யார் காரணம் என சூரியிடம் விஜய் சேதுபதி சொல்வதாக ஒரு லீட் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி – கெளதம் மேனன் மோதல்
அதேபோல் விஜய் சேதுபதிக்கும் சூரிக்கும் இடையே அதிகமான உரையாடல்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மிக முக்கியமாக விஜய் சேதுபதி – கெளதம் மேனன் இருவருக்கும் இடையேயான ஆக்ஷன் ட்ராமா இரண்டாம் பாகத்தில் தான் இடம்பெற்றுள்ளது. அதனால், அந்தக் காட்சிகள் இன்னும் மிரட்டலாக இருக்கும் என உறுதியாகக் கூறலாம். மேலும், விஜய் சேதுபதி பேசும் அரசியல் வசனங்கள் இன்னும் தூக்கலாக இருக்கும் என்பதையும் லீடாக கொடுத்துள்ளார் வெற்றிமாறன். இதனால், முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் தரமான படைப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் திரையரங்கில் இருந்து வெளியேறுகின்றனர்.