புதுடெல்லி: கனரக சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையங்களில் (ஏடிஎஸ்) கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் 2024 ஜூன் 1ம் தேதி முதல் கட்டாய தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனும் உத்தரவிடப்பட்டிருந்தது. கனரக வாகனங்களுக்கான கட்டாய தகுதி பரிசோதனை செய்யும் திட்டம் நேற்று முதல் அமலான நிலையில், இதற்கான கெடுவை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் மேலும் 18 மாதம் நீட்டித்து உத்தரவிட்டது. அதன் அறிக்கையில், ‘ கனரக மற்றும் நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டாய தகுதி சோதனைக்கான கெடு அடுத்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.