செங்கல்பட்டு/சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10-ல் இருந்து, அதிகபட்சமாக ரூ.60 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் கவலைக்கு உள்ளாகி உள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்றுதேசிய நெடுஞ்சாலைகள் திட்டஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பரனூர் சுங்கச்சாவடி: தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கார்களுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105-ல் இருந்து ரூ.115, லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-ல் இருந்து ரூ.240, மூன்று அச்சு (ஆக்ஸில்) வாகனங்களுக்கு ரூ.225-ல் இருந்து ரூ.260, நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு ரூ.325-ல் இருந்து ரூ.375, ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.395-ல் இருந்து ரூ.455-ஆக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பழைய சுங்கக் கட்டணத்தில் இருந்து குறைந்தபட்சமாக ரூ.10முதல், அதிகபட்சமாக ரூ.60 வரைசுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கார் மற்றும் கனரக வாகனங்களில் பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.மேலும், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயரும் என்று பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.
இதேபோல, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை உத்தண்டி சுங்கச்சாவடி மற்றும் கோவளம் சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், தமிழகம் முழுவதும் மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரவாயல் சுங்கச்சாவடி முன் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகர மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்று, சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், பட்டறை பெரும்புதூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று (ஏப்.1) லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.