சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, பவானிஸ்ரீ, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இளையராஜா இசையமைத்திருக்கும் விடுதலை முதல் பாகம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
விடுதலை படத்தை பார்த்த பலரும் அந்த படத்தை பாராட்டி வருகின்றனர். சிலர், சுமார் ரகம் தான் என்கிற நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து ஒரு நாள் முழுக்க #ViduthalaiPart1 ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கிலே இருக்கிறது.
விடுதலை – வெற்றி
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள விடுதலை திரைப்படம் வெற்றிப்படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குமரேசனாக சூரி தனது ஒட்டுமொத்த உடல் உழைப்பையும் போட்டு நடித்து இருக்கிறார். நாயகி பவானிஸ்ரீ அந்த நிர்வாணக் காட்சிகளில் எல்லாம் கண்ணீர் வரவைக்கிறார். பெருமாள் வாத்தியாராக விஜய்சேதுபதி வாழ்ந்துள்ளார். கெளதம் மேனன், சேத்தன் மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு கவனத்தை ஈர்ப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
சிங்கிள் ஷாட்டில் ரயில் விபத்து
ஏகப்பட்ட விருது படங்கள் படம் முழுக்க சிங்கிள் ஷாட்களை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை முதல் பாகத்தின் முதல் பத்து நிமிடங்கள் ஒரு ரயில் விபத்தின் கோரத்தை காட்டுகிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த சீனை சிங்கிள் ஷாட்டில் எடுத்து அசத்தியிருப்பது தான் ரசிகர்களை ஆரம்பத்திலேயே விடுதலை உலகுக்குள் நம்மை கட்டி அழைத்துச் செல்கிறது என ரசிகர்கள் மெய் சிலிர்க்கின்றனர்.
பவானிஸ்ரீக்கு குவியும் பாராட்டுக்கள்
ஜிவி பிரகாஷின் தங்கையான பவானிஸ்ரீ விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். ஹீரோயின் என்றும் பாராமல் அவரையும் அந்த விசாரணை காட்சியில் அடித்து நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துவது தான் ரசிகர்களை உலுக்கி எடுத்து இருக்கிறது. பலரும் அந்த நிர்வாணக் காட்சியையும் பவானிஸ்ரீ நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
பெண்ணின் நிர்வாணம்
“பெண்ணின் நிர்வாணம் உங்களை அழ வைக்குமா? கோபம் கொள்ள செய்யுமா? ஆற்றாமையால் நோக செய்யுமா? செய்யும்!!!!” என ஏகப்பட்ட பெண் ரசிகைகளே வெற்றிமாறனின் விடுதலை பட நிர்வாணக் காட்சியை பார்த்து கனத்த இதயத்துடன் இது போன்ற சித்ரவதைகள் ரொம்பவே கொடுமையானது என குரல் கொடுத்து வருகின்றனர்.