அதிமுகவோடு கூட்டணி என்றால் தலைவனாக அல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறி அண்ணாமலை அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பினார். அதே போல் கூண்டை விட்டு கிளி பறக்க தயாராகிவிட்டது என்று பூடகமாகவும் பேசினார். இதனால் பாஜக தலைமையில் புதிய அணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதி!
பாஜக போன்ற தேசிய கட்சியில் கூட்டணி முடிவை மேலிடம் தான் எடுக்கும். பாஜக தலைமையோ அதிமுகவுடன் கூட்டணியை தொடரவே விரும்புகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, “அதிமுக கூட்டணியில்தான் பா.ஜ.க இருக்கிறது” என்று உறுதிபடுத்தியுள்ளார். அதிமுகவிலும் சில முன்னாள் அமைச்சர்கள் பாஜகவுக்கு எதிராக பேசினாலும் கட்சியின் பொதுச் செயலாளர்
பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என்பதை மீண்டும் அழுத்தமாக கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் தான் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாஜகவுக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார்.
பாஜக தலைமையில் கூட்டணி இல்லையா?
அண்ணாமலை பேசியது போல அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியே வந்தால் அவர்களுடன் அமமுக கூட்டணி அமைக்கலாம். பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், ஐஜேகே போன்ற கட்சிகளும் ஓபிஎஸ் அணியும் பாஜக கூட்டணிக்கு வந்தால் ஒரு சில இடங்களை வெல்லலாம் என தினகரன் தரப்பு கணக்கு போட்டு வந்ததாக சொல்கிறார்கள்.
தினகரன் அதிருப்தி!
ஆனால் அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ள நிலையில் பாஜக மீதான தங்கள் அதிருப்தியை செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டியுள்ளார் டிடிவி தினகரன். அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்சினைக்கு பாஜக தான் காரணம் என்று கூறியுள்ளார்.
துரோகம் வென்றதாக வரலாறு இல்லை!
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. துரோகத்தின் மூலமே ஒருவர் பதவியைப் பிடித்திருப்பதற்கு, வருங்காலத்தில் பதிலை அவர் சொல்லித்தான் ஆக வேண்டும். பழனிசாமி வாலியைப்போல் வெற்றி பெற்றிருக்கிறார் என யாரோ சொல்லியிருந்தார். ராமாயணத்தில் வாலி வில்லனாகப் பார்க்கப்படுகிறார். அதேபோல இன்று வெற்றி பெற்றதாலே பழனிசாமி, புரட்சித்தலைவராகவோ அம்மாவாகவோ முடியாது.
எடப்பாடியிடம் பண பலம்!
கட்சியை அவர் தன் வசப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். காரணம் முதலமைச்சராக இருந்ததால் ஏற்பட்ட பணபலம். அ.தி.மு.க, பழனிசாமி என்கிற சுயநல மனிதரிடம் சிக்கித் தவிக்கிறது. இன்றைக்கு எந்தத் தொண்டர்கள், அவரிடம் கட்டுப்பட்டு இருக்கிறார்களோ அவர்களே அதைவிட்டு வெளியேறுவார்கள்.
பாஜக தான் காரணம்!
அம்மாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவின் கட்சியில் ஏற்பட்ட அத்தனைக்கும் காரணமே மத்தியில் ஆள்பவர்கள்தான். அவர்கள்தான் இருவரையும் இணைத்துவைத்தார்கள். அவர்கள் நினைத்தால்தான் மீண்டும் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைய முடியும்.
இந்திக்கு எதிர்ப்பு!
தஹிக்கு நஹி தான் தமிழ்நாட்டில் அனைவரின் கருத்தும். தயிர் என தமிழில் இருக்கிறது, இணைப்பு மொழியான ஆங்கிலம் இருக்கும் போது தஹி என்ற இந்தி திணிப்பு தேவையற்றது. அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று கூறினார்.