விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் `பி.எம்.மித்ரா’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத்தூரிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்ல விருதுநகர் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சாத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதற்காக தமிழக பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் தலைமையில் கட்சித்தொண்டர்கள் புறப்பட தயாராக இருந்தனர். அப்போது, பா.ஜ.க.வின் பாதயாத்திரைக்கு காவல்துறையின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான பா.ஜ.க. கட்சித்தொண்டர்கள், சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு திடீரென திரண்டதால் சாத்தூரில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று மேடையில் பேசிய பேராசிரியர் இராம.சீனிவாசன், “நாளை முதல் பா.ஜ.க. கட்சி புதுக்கணக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் 100க்கு 40 சதவீதம் பேர் பா.ஜ.க.வுக்கு வாக்குச்செலுத்த தயாராக உள்ளதாக முடிவுகள் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தி.மு.க.வின் வாக்குசதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாக பா.ஜ.க. வாக்குசதவீதம் தற்போது இருப்பதைக் காட்டிலும் மேலும் உயரும். தி.மு.கவின் வாக்குசதவீதம் தற்போதைய நிலையை காட்டிலும் குறைந்து போகும் சூழ்நிலை உள்ளது. தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-தேதி தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கண்டிப்பாக வெளியிடுவார். அப்போது யார் யாரெல்லாம் அரசியல் நிர்வாணமாக போகிறார்கள் என்று தெரிந்துவிடும். எனவே 14ம் தேதி வரை ஊழல் அமைச்சர்கள் பட்டியல் மிக ரகசியமாக இருக்கும்” என பேசினார்.