பிரதமர் நரேந்திர மோடியை பற்றி, பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல் அவதுாறாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ வேகமாக பரவி வருகிறது.
ராய்ச்சூர் பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல். இம்முறையும் இவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இவர், தன் ஆதரவாளர்களிடம் பேசியதாக கூறப்படும் ஆடியோ, வேகமாக பரவி வருகிறது.
இதில் அவர், ‘பிரதமர் மோடியின் வலது கை கூறினாலும், நான் கேட்க மாட்டேன். நானே சிங்கிள் ஆர்மி. எனக்கு ரைட், லெப்ட் என யாரும் இல்லை. நானே மோடி, நானே டிரம்ப். தேர்தலில் நான் தோற்றாலும் கவலை இல்லை; வெற்றி பெற்றாலும் கவலை இல்லை. கவலையில்லாத மனிதர் என்றால், அது சிவராஜ் பாட்டீல் மட்டுமே. நான் கடவுளை போன்றவன்’ என ஜம்பமாக பேசி உள்ளார்.
பிரதமரை பற்றி மட்டுமின்றி, அமைச்சர் ஸ்ரீராமுலு, எம்.எல்.ஏ., சோமசேகர ரெட்டியை பற்றியும், அவமதிப்பாக பேசி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., தயாராகும் நிலையில், கட்சி எம்.எல்.ஏ.,வின் இத்தகைய பேச்சு, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவராஜ் பாட்டீல் கூறுகையில், ”இது மிகவும் பழைய ஆடியோ. இதில் உள்ள குரல் என்னுடையதுதான். ஆனால் நான் அப்படி பேசவில்லை. சில குள்ள நரிகள், உள் நோக்கத்துடன் தங்களுக்கு தேவையானபடி ஆடியோ தயாரித்து, வெளியிட்டு உள்ளனர். அரசியலில் தந்திரம் இருக்கலாம். குள்ள நரித்தனம் இருக்கக்கூடாது,” என்றார்.
– நமது நிருபர் –