சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் கறுப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சமீப நாட்களாக இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள் ஏதும் இன்றி இருந்தது. ஆனால் உள்ளூர் அளவில் இந்தி பேசும் வட மாநில தொழிலாளர்கள் மீது சிறு சிறு தாக்குதல் நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் பெரிய அளவில் இந்தி எதிர்ப்பு போராட்டமோ, வட மாநில மக்களுக்கு எதிரான கலவரமோ ஏதும் நடைபெறவில்லை. இப்படி இருக்கையில்தான் கடந்த மாதம் திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சேவை மையத்தின் பெயர் பலகை தமிழ் எழுத்துக்களில் ‘சகயோக்’ என்று மாற்றப்பட்டது.
இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் மீண்டும் பெயர் பலகை தமிழ் மொழில் ‘சேவை மையம்’ என்று மாற்றி வைக்கப்பட்டது. இந்த சர்ச்சை ஓய்ந்து சில நாட்களே ஆன நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் வேறு ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டது.
தயிரா? தஹியா?
அதாவது, தமிழ்நாட்டின் ஆவின், கர்நாடகத்தின் நந்தினி, கேரளத்தின் மில்மா உள்ளிட்ட மாநில அரசுகளால் தயாரித்து விநியோகிக்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் தயிர் என மாநில மொழிகளில் எழுதுவதற்கு பதிலாக ‘தஹி’ என இந்தி மொழியில் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு ஏற்கனவே புகைத்துக்கொண்டிருந்ததை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தியது தமிழ்நாடு உட்பட சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
எதிர்ப்பு
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்’ என்று எச்சரித்திருந்தார். இதனையடுத்து இந்த அறிவிப்பை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திரும்ப பெற்றது. இந்தி திணிப்புக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சற்று காட்டமாகவே மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்தின் சலசலப்புகள் ஓய்வதற்கு முன்னரே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தி எழுத்துக்கள்
அதாவது, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி மொழியை மர்ம நபர்கள் கறுப்பு மை கொண்டு அழித்திருக்கிறார்கள். கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி செல்லும் பாதையில் அதாவது 5வது நடைமேடையில் உள்ள பெயர் பலகையில் கோட்டை ரயில் நிலையம் என்று தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என 3 மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. இதில் இரண்டாவதாக நடுவில் இருந்த இந்தி மொழியை மட்டும் மர்ப நபர்கள் அழித்துள்ளனர். இந்த சம்பவம் மார்ச் 31ம் தேதி காலையில் அரங்கேறியிருக்கிறது.
சிக்கல்
கறுப்பு மை கொண்டு பெயர் பலகை அழிக்கப்பட்டிருப்பதை பார்த்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் அளித்த புகாரின் பெயரில் கடற்கரை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் எனும் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமிரா இல்லையென்று சொல்லப்படுகிறது. எனவே அக்கம் பக்கத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களில் பதிவாக காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஹி பஞ்சாயத்தையடுத்து தற்போது ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வார்த்தைகள் அழிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.