கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியலை சேர்ந்தவர் முருகன்-பிரேமா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களை கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பாமல் அவரது பெற்றோர்கள் வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளதாக குழந்தைகள் நல மையத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி, குழந்தைகள் நல மைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது குழந்தைகளின் தாய் பிரேமா, அவர்களை தடுத்து நிறுத்தி வீட்டிற்குள் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் வீட்டிற்குள் சென்றபோது மூன்று சிறுவர்களும் தனித்தனி அறையில் வீட்டில் பூட்டி வைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தாய் பிரேமாவிடம் விசாரணை செய்தனர்.
அப்போது பிரேமா, “தனது மகன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு சீருடை அணியாமல் சென்றதால் அவனை ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதன்பிறகு மகன்களை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 4 ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பவில்லை என்றுத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அதிகாரிகள் மகன்களை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளனர். அதற்கு பிரேமா தன் மகன்களை அனுப்ப மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.