சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் பழனி சாமி தாக்கல் செய்துள்ளார்.
நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர், அதிமுக நடத்திய உள்கட்சித் தேர்தலில் பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, மார்ச் 28-ம்தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தாக்கல் செய்துள்ளார்.
ஓபிஎஸ் கடிதம்: அதேநேரம், அதிமுக தலைமை பொறுப்பு விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், தேர்தல் ஆணைய ஆவணங்களில் தற்போது வரை அதிமுகவின் உச்சபட்ச பதவி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இடம்பெற்றுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.
எனவே அது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் ஆணையத்தில் சமர்ப் பிக்கப்பட்டால், மேற்கூறிய விவரங்களைக் கருத்தில் கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் டெல்லி பயணம்: இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, விரைவில் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி அமைப்பது, தமிழகத்தில் உள்ள இதர கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, உள்ளிட்ட தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.