தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களில் குறிப்பாக சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்ததால், சாதாரண நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் அதிக செலவு செய்ய வேண்டிய இருந்தது இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நியாயமான விலையில் சிமெண்ட் விற்பனை செய்யத் தமிழக அரசு சார்பில் அம்மா சிமெண்ட் விற்பனைத் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் 100 சதுர அடிக்கு 50 மூட்டை வீதம் 1,500 சதுர அடி வரை கட்டுவோருக்கு 50 கிலோ அடங்கிய மூட்டை 190 ரூபாய் வீதம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 33 மண்டலங்களிலுள்ள கிடங்குகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் ஒன்றிய அளவிலான கிடங்குகள் என மொத்தம் 470 கிடங்குகளில் வீடு கட்டுவோர் உரிய சான்றிதழ்கள் பெற்று வரைவோலை எடுத்துச் சென்று அம்மா சிமெண்ட் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2016 முதல் 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் சிமெண்ட் விற்பனையில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் விண்ணப்பதாரர் அல்லாதவர்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் அதிக விலைக்கு அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி இளநிலை தர ஆய்வாளர் ரவி, புகழேந்தி, இளநிலை உதவியாளர்கள் சதீஷ்குமார், செல்வராஜ் மற்றும் பில் கிளார்க் ஈஸ்வரகுமார் ஆகிய 5 பேர் மீது நம்பிக்கை மீறல் மற்றும் உண்மையான பயனாளிகளின் கையெழுத்தை போலியாக தயாரித்து அரசை ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கொஞ்சம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.