பியாங்யாங்: வடகொரியாவில் தென்கொரிய வீடியோக்களை பார்த்ததற்காக சிறுவர்களுக்கு மரண தண்டனை, நாட்டு தலைவரை படத்தை நோக்கி கை காட்டி இழிவு படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை என பல கொடூரமான மனித உரிமை மீறல்களில் வடகொரியா ஈடுபட்டு இருப்பதாக தென்கொரியா அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகின் வினோதமான நாடுகளில் ஒன்று வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று வெளிநாடுகளுக்கு எதுவுமே தெரிந்து விடாதபடி இரும்புத்திரை போட்டுக் கொண்டு ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார் அந்த் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன்.
வெளி உலகத் தொடர்பு எதுவும் இன்றி அந்த நாட்டு மக்களை வைத்திருக்கும் கிம் ஜாங் அன், மக்களுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
வினோத கட்டுப்பாடுகள்
சமூக வலைத்தளங்களுக்கு தடை, மேற்கத்திய நாடுகளின் சினிமாக்கள் பார்ப்பதற்கு தடை என உதாரணத்திற்கு பல கட்டுப்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் பல விசித்திரமான கட்டுப்பாடுகளும் கூட அங்கு அமலில் இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட வடிவத்தில் தான் சிகை அலங்காரம் இருக்க வேண்டும் என்பது உள்பட பல கட்டுப்பாடுகள் உள்ளன. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவரது தந்தை மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பதற்காக அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய கருத்தடை
இப்படி தனது அதிரடி நடவடிக்கைகள் மட்டும் இன்றி வினோதமான உத்தரவுகளுக்கும் உலக அளவில் கிம் ஜாங் அன் பெயர் போனவர். சிறிய குற்றங்களுக்குக் கூட மிகக் கொடூர தண்டனை வடகொரியாவில் கொடுக்கப்படுகிறது உலக அளவில் பரவலாக அறியப்பட்டு இருந்தாலும் வடகொரிய நாட்டில் நடைபெறக் கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
கர்ப்பிணிக்கு மரண தண்டனை
இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, ஆறு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றியது, மனிதர்களை பரிசோதனைக்கு உள்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்க்கு கட்டாய கருத்தடை என நெஞ்சை அதிர வைக்கும் பல கொடூரமான மனித உரிமை மீறல்கள் வடகொரியாவில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு…
அதேபோல், உயரம் குறைவாக பெண்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு கட்டாய கருத்தடை அகற்றம் ஆகியவை நடைபெற்று வருவதாகவும் இதற்காக அந்த நாட்டு சுகாதார ஊழியர்கள் உயரம் குறைவான பெண்களின் பட்டியலை தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக மதத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும் நாட்டை விட்டு தப்ப ஓட முயன்றதாகவும் கூறி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உருவப்படத்தை குறிப்பிட்டு காட்டியதற்கு
ஆறு மாத கர்ப்பிணி பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அந்த கர்ப்பிணி பெண் செய்த குற்றம் என்னவென்றால், தனது வீட்டில் நடனம் ஆடும் போது வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் இல் சங்- இன் உருவப்படத்தை குறிப்பிட்டு காட்டியதுதானாம். இதற்காகத்தான் இவ்வளவு பெரிய தண்டனையை வடகொரிய விதித்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் வெளியீடு
அதுமட்டும் இன்றி, போதைப்பொருள்கள், தென்கொரியாவின் வீடியோக்களை பார்த்தது மற்றும் தென் கொரியாவின் மத நடவடிக்கைளில் பின்பற்றியதற்காக பலருக்கும் மரண தண்டனையை வடகொரியா விதித்து இருப்பதாகவும் அறிக்கையில் உள்ளது. தென்கொரியா வடகொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையை தயாரித்து வந்தாலும் பொது வெளியில் இந்த அறிக்கைகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
450 பக்க அறிக்கை
வடகொரியாவில் நடக்கும் கொடூரமான மனித உரிமை மீறல்களை வெளியுலகத்திற்கு காட்டும் வகையில் இந்த அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் தென்கொரிய அதிகாரிகள் கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய சுமார் 500 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் வடகொரியாவின் உள்விவகாரங்களை கவனித்து வரும் ஒருங்கிணைப்பு அமைச்சகம் 450 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தான் மேற்கூறிய பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.