பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: காணொலி வாயிலாக ஏப்.3-ம் தேதி தலைவர்களுடன் ஆலோசனை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக, சமூகநீதிகுறித்து ஏப்.3-ம் தேதி காணொலி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

இதில், தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிராகஅனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்டமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை பிப். 2-ம் தேதி அறிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், இதில் இணையும்படி நாடுமுழுவதும் பாஜக தவிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள், தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என 38 பேருக்கு அழைப்பு விடுத்தார்.

இதில், காங்கிரஸ் சார்பில் வீரப்பமொய்லியை சோனியா காந்தி உறுப்பினராக அறிவித்தார். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் முதல்வரின் இந்த முயற்சியைப் பாராட்டியதுடன், ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து, கடந்தாண்டு பிப்.27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ முதல்பாகம் வெளியீட்டு விழா சென்னைநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவானது, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாறியுள்ளதாக அப்போதே அரசியல் நோக் கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்தாண்டு மார்ச் 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதிலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நேரடியாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அழைப்புவிடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அனைத்து நிகழ்வுகளிலும் சமூகநீதியை முன்னிறுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டுஅடுத்தகட்டமாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நட வடிக்கையை எடுத்துள்ளார்.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான மனப்பான்மையில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் ஏப்.3-ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த முடிவெடுத்துள்ளார். இதுபற்றி அனைத்து தலைவர்களுக்கும் அவர் அழைப்புவிடுத்துள்ளார். இதில், சமூக நீதியை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். டெல்லியில் இருந்தபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 18 தேசிய தலைவர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதவிர, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரையும் முதல்வர் நேரடியாகத் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்ததை முன்னிட்டு, அக்கட்சி பிரதிநிதிகளும் காணொலி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு சமூகநீதி சார்ந்த அமைப்புகளின் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்திலும் பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதால், தேர்தல் கூட்டணிக்கு இப்போதே அச்சாரம் போடும் முயற்சியில் இறங்கியுள்ளது திமுக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.