இந்துத்துவ தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் பலமுறை, இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்கள் தான், கட்டாயப்படுத்தி அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டனர் என்று கூறியிருக்கின்றனர்.
இப்படியிருக்க, இஸ்லாமிய குடியரசு நாடான பாகிஸ்தானில் இருப்பவர்கள், இந்தியாவிலிருந்து பிரிந்ததை தவறு என்று நினைப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
மறைந்த ஹேமு கலானியின் பிறந்தநாள் விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத், “பாகிஸ்தானிலிருப்பவர்கள் இன்று, இந்தியப் பிரிவினையைத் தவறு என்று கூறுகிறார்கள். அவர்கள், இந்தியாவிலிருந்தும் அதன் கலாசாரத்திலிருந்தும் பிரிந்தவர்கள்.
இன்றைக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா… பிடிவாதத்தால் பாரதத்தை விட்டு பிரிந்தவர்கள் இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா… இந்தியாவுக்கு வந்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே வலி இருக்கிறது” என்று கூறினார்.
மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் சூழல் குறித்துப் பேசிய மோகன் பகவத், “பாகிஸ்தானைப் பாரதம் தாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. எல்லோரும் அப்படியல்ல. மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்த அழைப்பு விடுக்கும் கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் அல்ல நாங்கள். அதேசமயம், தற்காப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் கலாசாரத்தில் இருந்து வருகிறோம் நாங்கள். நிச்சயமாக அதைச் செய்வோம்” என்றார்.