சென்னை: சென்னையில் 9 சாலை சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், சென்னையில் 9 சந்திப்புகளில் சாலை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி, “பி.டி. ராஜன் சந்திப்பு, அக்கரை சந்திப்பு, ஆவடி சந்திப்பு, சேலையூர் மற்றும் முகாம் சாலை சந்திப்பு, வேளச்சேரி தாம்பரம் சாலையில் கைவேலி சந்திப்பு, கொரட்டூர் சந்திப்பு, வானகரம் சந்திப்பு, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சந்திப்பு உள்ளிட்ட 9 இடங்களில் சாலை மேம்பாலங்கள் அமைக்க விரிவான திட்டத்தை தயார் செய்யும் பணிகள் ரூ.9 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 8 பணிகளுக்கு நில எடுப்புப் பணிகள் ரூ.796 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.