கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தடுப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரியவர்கள் மற்றும் இளம் வயதினர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முன்னணி சுகாதார பணியாளர்கள் போன்றோர் அதிக முன்னுரிமை கொண்ட குழுவினராகக் கருதப்படுகின்றனர்.
இவர்கள் கோவிடின் கடைசி தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 அல்லது 12 மாதங்களுக்குப் பிறகு, கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகையில், கடுமையான நோய்க்குள்ளாகும் அபாயத்தில் இருக்கின்றனர்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்படாத பெரியவர்கள் மற்றும் இளையவர்கள் முதல் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகள் மற்றும் முதல் பூஸ்டர் தடுப்பூசியை மட்டும் செலுத்திக் கொண்டால் போதுமானது.
கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது என்ற போதிலும், குறைந்த பொதுச் சுகாதார வருவாயைக் கருத்தில் கொண்டு, அவற்றை இந்தக் குழுவினருக்குப் பரிந்துரைக்கவில்லை.
6 மாதங்கள் முதல் 17 வயது வரையிலான ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் குறைந்த முன்னுரிமை கொண்ட குழுவில் உள்ளனர்.
எனவே கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.