மதுரை: கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் குடும்பத்தோடு வந்து பார்வையிட்டனர். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்ததோடு அருங்காட்சியக ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் 2600 ஆண்டுகள் பழைமையாக பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தன. கொந்தகையில், 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கறுப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கிடைத்தன. இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வில், உருண்டையான பானைகள், உருக்கு உலைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவையும் கிடைத்தன. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிபடுத்த ரூ.18.42 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகம்
கீழடியில் செட்டிநாட்டு கலை பாணியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கடந்த மாதம் 5ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து நேரில் பார்வையிட்டார். அதன்பின்னர் நாள்தோறும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிரபலங்கள் வருகை
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட ஏராளமானோர் தினசரியும் வந்து செல்கின்றனர். அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை உலக பிரபலங்களும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுற்றுலா போல மாணவ மாணவிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருகின்றனர்.
சூர்யா, ஜோதிகா, சிவக்குமார்
இந்த நிலையில் கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகுமார், சூர்யாவுடன் ஜோதிகா, மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் இணைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
வெங்கடேசன் எம்.பி
கீழடி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு பொருட்கள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் மதுரை தொகுதி எம்.பி வெங்கடேசன், சூர்யா, ஜோதிகாவிற்கு விளக்கம் அளித்தார். அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கான கட்டணங்களை பெற்றுக்கொண்ட போதும் அருங்காட்சியக ஊழியர்களுடனும் இணைந்து சூர்யா, ஜோதிகா குடும்பத்தினர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
கட்டணம் எவ்வளவு
அருங்காட்சியகத்தை இதுவரையில் அனைவரும் இலவசமாக பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி உள்நாட்டு மாணவர்களுக்கு தலா ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு 15 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.