தமிழக மாவட்டம் மதுரையில் எம்.எட் மாணவி விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பல்கலைக்கழக மாணவி
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகேஸ்வரி (25) மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மாடியில் இருந்து கீழே விழுந்தார். திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டதால் மாணவிகள் பலர் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது மகேஸ்வரி தரையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பரிதாபமாக உயிரிழந்த மாணவி
இதனையடுத்து மாணவி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போன் பேசிக் கொண்டிருந்த மாணவி தவறி கீழே விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.