சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ. இவரின் மனைவி பார்கவி (31) இவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவன குறித்து கேள்விபட்டு நான் ரூ. 16,44,000 முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய பணத்தை ஏமாற்றிவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை நான் நேரில் சந்தித்து பல தடவை என்னுடைய பணத்தைக் கேட்டேன். அப்போது பவுன்ஸர்களை வைத்து மிரட்டினர். நான் 5.9.22-ம் தேதி பணத்தைக் கொடுத்தேன். அந்தப் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த நிதிநிறுவனத்தில் பல நபர்கள் பணத்தை போட்டு ஏமாந்து உள்ளார்கள் என்ற செய்தி நான் அங்கு சென்றபோது கிடைத்தது” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபாதேவி, ஐபிசி 403, 406,420 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கூறுகையில், “பார்கவி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் குறித்து விசாரணை நடத்தினோம். விசாரணையில் இந்த நிதி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பிரியா என்பவர்தான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆரம்பத்தில் பிரியா, இந்த நிதி நிறுவனத்தில் சில லட்சங்களை முதலீடு செய்திருக்கிறார். அதன்பிறகு தனக்குத் தெரிந்தவர்களிடம் முதலீடுகளை பெற்று நிதி நிறுவனத்தில் கொடுத்து கமிஷனையும் பெற்றியிருக்கிறார். பிரியாவை கைது செய்திருக்கிறோம். அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த நிதி நிறுவன மோசடி குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
நிதி நிறுவனம் தொடர்பாக ஏற்கெனவே சில புகார்கள் வந்திருக்கின்றன. மேலும் நிதி நிறுவனம் தரப்பில் கொடுத்த தங்க வழிப்பறி புகாரில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்களே நாடகமாடியது தெரியவந்திருக்கிறது. மேலும் அந்த வழக்கில் முதலீடு செய்த ஒருவரை சிக்க வைக்க வழிப்பறி புகரை கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. பொதுவாக மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கு வாரந்தோறும் 3,000 ரூபாய் வட்டியும் மாதந்தோறும் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வட்டியாகவும் கொடுப்பதாக ஆசைவார்த்தைகளைக் கூறுவதுண்டு. அதே ஸ்டைலில்தான் முகப்பேர் நிதி நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்த நிதி நிறுவனம், கோல்டு பிசினஸ், அடகு கடை, சூப்பர்மார்க்கெட் என பல தொழில்களை செய்து வருகிறது. மோசடி தொகை கோடிகளைத் தாண்டும் என்பதால் பொருளாதார குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கை மாற்ற முடிவு செய்திருக்கிறோம்” என்றனர்.