புதுடெல்லி: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ”பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தென்னிந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் சில வடமேற்கு இந்தியப் பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் பொதுவாக இந்தக் காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்தே காணப்படும். அதேநேரத்தில், தென்னிந்திய தீபகற்ப பகுதிகளிலும், வடமேற்கு பகுதிகளிலும் வெப்பம் வழக்கமான அளவிலோ அல்லது வழக்கத்தைவிட குறைவான அளவிலோ இருக்கக்கூடும்.
மழையைப் பொறுத்தவரை, இம்மாதம் (ஏப்ரல்) வழக்கமான அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் மழையின் அளவு வழக்கமானதாகவோ அல்லது வழக்கத்தைவிட கூடுதலாகவோ இருக்கக்கூடும். அதேநேரத்தில், வடகிழக்கு இந்தியாவில் வழக்கமான அளவு மழையே பெய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.