காரைக்கால்: புதுவை மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் சார் உதவி பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பட்டினம் நிரவி பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய உதவிப் பதிவாளர் சந்திரமோகன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் நேரு வீதியில் இருக்கும் உதவிப் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் பணியிலிருந்த உதவிப் பதிவாளர் சந்திரமோகன், அலுவலக ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யும் கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள், மென்பொருள் சாதனங்கள், சி.சி.டி.வி பதிவு ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை கைப்பற்றினர். பத்திரப்பதிவுக்கு அலுவலகத்தில் இருந்த பத்திரங்கள், ஆதாரங்கள், உதவிப் பதிவாளர் மேஜையிலிருந்த ரொக்கம், செல்போன் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். அதே நேரம் மற்றொரு குழுவினர் காரைக்கால் ராஜாத்தி நகரில் இருக்கும் உதவிப் பதிவாளர் சந்திரமோகனின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீட்டிலிருந்த சந்திரமோகனின் மனைவி, உறவினர்கள், வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனையை தொடர்ந்து சந்திரமோகன் உதவி பதிவாளர் பொறுப்பு வகிக்கும் திருநள்ளாறு மற்றும் நிரவி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. மேலும் சந்திரமோகனின் உதவியாளர் அருண்குமார் என்பவரது வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள், ரொக்கம், நகை கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இன்று அதிகாலை 3 மணி வரை மொத்தம் 12 மணி நேரம் நடைபெற்ற தொடர் சோதனை முடிவில் சந்திரமோகன் மற்றும் பத்திரப்பதிவு உதவியாளர் அருண்குமார் இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர்.