புதுடெல்லி: ராம நவமி விழாவில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் எம்எல்ஏ ராஜா சிங் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153-A (இரு பிரிவினருக்கு இடையே மதம், இனம், பிறப்பிடம், வாழ்விடம், மொழி சார்ந்து வெறுப்பைத் தூண்டுதல்), சட்டப்பிரிவு 506 (குற்ற மிரட்டல்) ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக ராஜா சிங் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக மத நல்லெண்ணத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக மேலிடம் அறிவித்தது. இருப்பினும், அவர் தொடர்ந்து தன் கருத்துகளால் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அண்மையில், எஸ்ஏ பஜாரில் நடந்த ராம நவமி விழாவில் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த அஃப்சல்கஞ்ச் காவல் நிலைய துணை ஆய்வாளர் ஜெ.வீரபாபு அளித்தப் புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை ஆய்வாளர் வீரபாபு கூறுகையில், “பேரணியின்போது பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பேசியது அனைத்தையும் காவலர் கீர்த்தி குமார் வீடியோ கேமராவில் பதிவு செய்துள்ளார். சர்ச்சைப் பேச்சுக்கு நடவடிக்கை கோரப்பட்டுள்ளது” என்றார். இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக ரவீந்தர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன? – ராம நவமியை ஒட்டி எஸ்ஏ பஜாரில் நடந்த சோபா யாத்திரையில் ராஜா சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியா மட்டும் இந்து தேசமானால் இங்கு நாமிருவர் நமக்கிருவர் கொள்கை கொண்டவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கும். நாம் ஐவர் நமக்கு 50 பேர் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு வாக்குரிமை இருக்காது.
இந்து ராஷ்ட்ரம் எப்படியிருக்கும் என்பது பற்றி இந்துத் துறவிகள் ஏற்கெனவே ஒரு பார்வையை உருவாக்கி வைத்துள்ளனர். அதற்கான அரசியல் சாசனத்தையும் அவர்கள் வகுத்து வருகின்றனர். இந்து ராஷ்ட்ரத்தின் தலைநகர் டெல்லியாக இருக்காது. காசி, மதுரா அல்லது அயோத்தி நகரங்களில் ஒன்றுதான் இந்து ராஷ்டரத்தின் தலைநகராக இருக்கும். இந்து ராஷ்டரத்தில் விவசாயிகளுக்கு வரி கிடையாது. பசுவதை நடக்காது. மதமாற்றத்திற்கு வாய்ப்பிருக்காது” என்று பேசியிருந்தார்.