தமிழக அரசு அலுவலர்களுக்கு ரூ.103 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: பொதுப் பணித் துறை அறிவிப்புகள்

சென்னை: 8 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும் என்றும், அரசுப் பொதுக் கட்டடங்களை திட்டமிட்டு நிர்மாணிப்பதில் புதிய வடிவமைப்புக் கொள்கை வெளியிடப்படும் என்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

> பொதுப்பணித் துறையின் நிர்வாகக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்:

  • மதுரையில் ஒரு புதிய பாரம்பரிய ‘கட்டட மையம் மற்றும் பாதுகாப்புக் கோட்டம்’ மற்றும் சென்னை, வேலூர், திருநெல்வேலியில் புதியதாக மூன்று உபகோட்டங்கள் உருவாக்கப்படும்.
  • பொதுப்பணித் துறை கட்டடக்கலை அலகில் ஒரு இணைத் தலைமைக் கட்டடக் கலைஞர், ஓர் உதவிக் கட்டடக் கலைஞர், 5 இளநிலைக் கட்டடக் கலைஞர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
  • பொதுப்பணித்துறையில் உள்ள மின் பிரிவினை மேம்படுத்துவதற்கு 5 புதிய மின் கோட்டங்கள், 15 புதிய மின் உபகோட்டங்கள், 10 மின் பிரிவுகள், 3 புதிய வானொலி உபகோட்டங்கள், திட்டம் மற்றும் வடிவமைப்பு வட்டத்தில் ஒரு புதிய மின் அலகு ஆகியவை தோற்றுவிக்கப்படும்.
  • தரக்கட்டுப்பாடு அலகினைப் பலப்படுத்தும் விதமாகத் திருச்சிராப்பள்ளியில் ஒரு புதிய தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூரில் புதிய தரக் கட்டுப்பாடு உபகோட்டங்கள் உருவாக்கப்படும். மேற்கூறிய அனைத்து நிர்வாக மேம்பாட்டுப் பணிகளும் பணியிடங்கள் ஒப்புவிப்பு மற்றும் பணிப்பெயர்ச்சி (Surrender and redeployment) அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

> சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.103 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்:

சென்னை தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு இதுவரை 900 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தற்போது 190 ‘பி’ வகை குடியிருப்புகளும், 190 ‘சி’ வகை குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. 2023-2024ம் ஆண்டில் 90 ‘சி’ வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.103 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

> 8 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்

  • சென்னை,கீழ்ப்பாக்கம் மனநல காப்பக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு அரங்க பாரம்பரிய கட்டடம் ரூ.4.65 கோடி மதிப்பீட்டிலும்,
  • சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைய ஆவண அறை கோபுர பாரம்பரிய கட்டடம் ரூ.310 கோடி மதிப்பீட்டிலும்,
  • சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள இணைப்பு பாரம்பரிய கட்டடம் (மீடியா அறை) ரூ.5.25 கோடி மதிப்பீட்டிலும்,
  • தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பழைய மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தின் பாரம்பரியக் கட்டடம் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலும்,
  • புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள பொது அலுவலக பாரம்பரிய கட்டடம் ரூ.15 கோடி மதிப்பீட்டிலும்,
  • கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நிறுவனம் (கட்டடம் II தெற்கு பகுதி) பாரம்பரியக் கட்டடம் ரூ.6.80 கோடி மதீப்பீட்டிலும்,
  • மதுரையில் உள்ள மதுரை மாவட்டப் பதிவாளர் அலுவலக (தெற்கு) பாரம்பரிய கட்டடம் ரூ.4 கோடி மதிப்பீட்டிலும்,
  • சிவகங்கை மாவடம்ட, காரைக்குடி வட்டத்தில் உள்ள சங்கரபதி பாரம்பரிய கோட்டையை ரூ.9.09 கோடி மதிப்பீட்டிலும் மறுசீரமைத்துப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

> திருச்சி சுற்றுலா மாளிகை ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்படும்

திருச்சிராப்பள்ளி சுற்றுலா மாளிகை வளாகத்தில், ஏ’ பிளாக்கில் உள்ள மூன்று முக்கியப் பிரமுகர்கள் தங்கும் அறைகள், ‘பி’ பிளாக்கில் உள்ள பத்து முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறைகள், ‘சி’ பிளாக்கில் உள்ள ஐந்து தங்கும் அறைகள், அனைத்தும் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்படும்.

> திருச்சி பொதுப்பணி பணியாளர் பயிற்சி நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

திருச்சி பொதுப்பணி பணியாளர் பயிற்சி நிலையக் கட்டடத்தில் நுண்திறன் வகுப்பறை (Smart Class room), கூடுதல் தங்கும் அறைகள், அறைகலன்கள் (Furniture) மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

> மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனியார் கட்டடக் கலைஞர்களின் தேர்ந்த பெயர் பட்டியல் (Panel of eminent Architects) தயாரிக்கப்படும்

பொதுப்பணித் துறையினால் நவீன காலத்திற்கு ஏற்ப பல்வேறு துறைகளுக்கு அடுக்குமாடி கட்டடங்கள், முக்கியமான நினைவகக் கட்டடங்கள், நூலகங்கள் மற்றும் மருத்துவமனை கட்டடங்கள் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன. மேலும், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பணிகளில் மாநில அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்த தனியார் கட்டடக் கலைஞர்களின் நிபுணத்துவத்தினைப் பயன்படுத்தும் விதமாகத் தேர்ந்த நிபுணர்களின் பெயர்ப் பட்டியல் (Panel of eminent Architects)தயாரிக்கப்படும்.

> அரசுப் பொதுக் கட்டடங்களை திட்டமிட்டு நிர்மாணிப்பதில் புதிய வடிவமைப்புக் கொள்கை (Design Policy) வெளியிடப்படும்

பொது இடங்களில் கட்டப்படும் அரசுக் கட்டடங்களைத் திட்டமிட்டு வடிவமைப்பதிலும், முகப்புத் தோற்றப் பொலிவை மின் விளக்கு அலங்காரங்களுடன் மெருகூட்டவும் பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைத்துப் புதுப்பிப்பதிலும், மரபு சார்ந்த மற்றும் நவீன கட்டடக் கலை உத்திகளைப் பயன்படுத்தும் நோக்குடன் புதிய வடிவமைப்புக் கொள்கை வெளியிடப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.