செய்யும் வேலையில் யாருக்கெல்லாம் நிறைவிருக்கும்? இந்த எண்ணிக்கை சொற்பம்தான். அதிலும் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையில் திருப்தி இருக்குமா?
இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள, Skillsoft நிறுவனம் ஆய்வை நடத்தியது. தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான சவால்கள், வாய்ப்புகள், ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை ஆராய, 45 சதவிகித தொழில்நுட்ப பெண் வல்லுநர்கள் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள், 2023 மகளிர் தொழில்நுட்ப அறிக்கையில் வெளியிடப்பட்டன.
* 2021-ம் ஆண்டில், 44 சதவிகித பெண்கள், தாங்கள் செய்யும் வேலையில் மிகவும் திருப்தி அடைந்ததாகக் கூறினர். ஆனால் அதுவே 2023-ல் இந்த எண்ணிக்கை 28 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
* இந்தப் பெண்கள், மூன்று இடங்களில் தங்களுடைய பணியின் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். ஒன்று வளர்ச்சித்திறன்… 30 சதவிகித பெண் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்களின் தற்போதைய வளர்ச்சித் திறனில் அதிருப்தி அடைந்துள்ளனர். இரண்டாவது, தற்போது பெறும் ஊதியம், மூன்றாவது… நிர்வாகத்தின் ஆதரவு.
* பதிலளித்தவர்களில் ஏறக்குறைய 40 சதவிகிதத்தினர், வேறு வேலைக்கு மாறுவதைக் கருத்தில் கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் மூன்று முக்கிய காரணங்களைக் கூறுகின்றனர். அவை… இழப்பீடு, கொடுக்கப்படும் வாய்ப்புகளில் சமத்துவமின்மை மற்றும் திறமையற்ற தலைமை.
* 36 சதவிகிதத்தினர் வாய்ப்புகளில் சமத்துவம் இல்லாததால் தாங்கள் வேலையை விட்டு விலகுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
* 26 வருட அனுபவமுள்ள தொழில்நுட்ப வல்லுநர்களை ஒப்பிடுகையில், 15 சதவிகித ஆண்கள் நிர்வாக நிலை பதவிகளை வகிக்கின்றனர். இதுவே பெண்களில் வெறும் 4 சதவிதத்தினர் மட்டுமே இப்பதவிகளை வகிக்கின்றனர்.
*நிர்வாகம் மற்றும் மூத்த தலைமைப் பதவிகளில் பாலின ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகமாகவே வெளிப்படுகின்றன.
*பெண் தொழில்நுட்ப வல்லுநர்கள் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கும், மூத்த பதவிகளுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகளைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். மூன்றில் ஒரு பகுதியினர், 34 சதவிகிதத்தினர், கடந்த ஆண்டில் தலைமை மற்றும் நிர்வாகத்தில் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து, ஸ்கில் சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி ஆர்லா டேலி கூறுகையில், “பணியிடத்தில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் சேர்ப்பு ஆகியவற்றை அதிக முன்னுரிமையாக மாற்றுவதற்கு நிறுவனங்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், பாலின இடைவெளி மிகவும் பரவலாக உள்ளது.
அனைத்து மட்டங்களிலும் உண்மையான சமத்துவத்தை அடையக் குறிப்பிடத்தக்கப் பணி தேவை என்பதையே எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது” என்று கூறினார்.