தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரம், குடும்ப நலத்துறை கொரோனா விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. எனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனா விதிமுறையை பின்பற்ற வேண்டும்.
தொற்று பரவாமல் தடுப்பது அவசியம். தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ பெறுவது கட்டாயம். கொரோனா தொற்று அதிகமாக பரவினால், இதற்கு அந்தந்தஅரசியல் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளன்று, ‘ஹெல்ப் டெஸ்க்’ துவக்க வேண்டும். முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்பதை போன்று, ஓட்டு போட டோக்கன் வினியோகிக்க வேண்டும்.
சமூக விலகலை பின்பற்ற, ஓட்டுச்சாவடி மற்றும் வெளிப்பகுதியில் அடையாள குறியீடு வைக்க வேண்டும்.
அனைத்து ஓட்டுச்சாவடிகள் முன், கொரோனா விழிப்புணர்வு குறித்து போஸ்டர் பொருத்த வேண்டும். ஓட்டுப்பதிவின் கடைசி ஒரு மணி நேரம், கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
ஓட்டுப்போட வருவோரும், விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக விலகலை பின் பற்ற வேண்டும். முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –