சென்னை: பங்குனி உத்திரம் திருவிழாவுக்கு தற்காலிகமாக அமைக்கப்படும் சிறு கடைகளுக்கு வாடகையை நிர்ணயித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் முதல் நிலை கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், பாடியநல்லூர் கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான மேய்கால் புறம்போக்கு நிலத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக அவர்களிடம் இருந்து கோயில் நிர்வாக கமிட்டி நாள் ஒன்று ரூ.12 ஆயிரம் வாடகையாக வசூலிக்கிறது. கோயிலுக்கு வரும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிவைகளை பஞ்சாயத்துதான் வழங்குகிறது.
எனவே, இந்த கடைகளுக்கான வாடகை தொகையை பஞ்சாயத்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு ஆய்வையும் மேற்கொள்ளாமல், நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வாடகையாக பஞ்சாயத்துக்கு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வாடகையை வசூலிக்க கோயில் நிர்வாக கமிட்டிக்கு தடை விதிக்க வேண்டும், என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், “கடந்த முறையும் மனுதாரர் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை இந்த உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பங்குனி உத்திரம் திருவிழா ஏற்கெனவே தொடங்கி, கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘மாவட்ட ஆட்சியர் என்பவர் பஞ்சாயத்து ஆய்வாளர் ஆவார். அந்த தகுதியின் அடிப்படையில், குத்தகை தொகையை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில் எந்த ஒரு உள்நோக்கமும் இருப்பதாக தெரிவியவில்லை. திருவிழாவுக்கு சிறுசிறு கடைகள்தான் அமைக்கப்படுகின்றன. அதனால் ஆட்சியர் நிர்ணயித்த வாடகை தொகை மிகவும் குறைவு என்று கூறுவதை ஏற்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.