சேலம் மாநகம், சேரராசன் சாலையில் அமைந்துள்ளது மாவட்ட மைய நூலகம். இங்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட புத்தக வாசிப்பாளர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 300-கும் மேற்பட்ட மாணவ/ மாணவிகள் அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் படிப்பதற்காக இந்நூலகத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட நூலக வளாகத்தில் மாணவிகள் சிலர் நின்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் ’செல்லக்குட்டி’ என்று பட்டப் பெயர் வைத்து அங்கிருந்த மாணவிகளை அழைத்துள்ளார். மாணவிகளும் யாரென்று தெரியாததால் சம்பந்தப்பட்ட நபரிடம் யாரை கூப்பிட்டதாக கேட்டுள்ளனர். அவர் உங்களை தான் கூப்பிட்டதாக போதையில் கூறியுள்ளார்.
இதனால் மாணவிகளுக்கும் அந்நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீஸிடம் கூறப்போவதாக அந்த மாணவிகள் கூறியபோது, “நான் யாருன்னு தெரியுமா! என்மேல எத்தனை கேஸ் இருக்குது தெரியுமா, உங்களால என்ன பண்ணிட முடியும். கிச்சிப்பாளையம் சரத்துனா தெரியாதவங்க யாரும் இல்ல. நானே பெரிய ரெளடி என்மேல கேஸ் குடுக்க போறீங்களா வாங்க போலீஸுக்கு போகலாம்னு” கூப்பிட்டுள்ளார். பின்னர் மாணவர்கள் கூடியதும், வீடியோ எடுப்பது தெரிந்ததும், தெரியாமல் சொல்லியதாக சமாளிக்கிறார். மாணவிகள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் அவர் கேட்காமல், தன்னை ரெளடி என்றே குறிப்பிட்டு வந்தார். பின்னர் மாணவிகள் பிரச்னை வேண்டாம் என கலைந்து சென்றனர்.
அங்கு வரும் மாணவர்களிடம் பேசுகையில், இந்த குறிப்பிட்ட நபர் நூலகம் இருக்கும் பகுதிக்கு அடிக்கடி வருவதாகவும் போதையில் அத்துமீறுவதாகவும் தெரியவந்தது.
இதனிடையே இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்கவே சேலம் மாநகர காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.