சென்னை: ராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்தினை இயக்க ஒரு விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எவ வேலு அறிவித்துள்ளார்.
மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் சாலையோரம் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அமைச்சர் எவ வேலு தமிழக சட்டசபையில் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு;
இந்தியா -இலங்கை கப்பல் போக்குவரத்து
இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கும் நோக்கில் 1. இராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ) 2. இராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் இயக்க இராமேஸ்வரம் சிறுதுறைமுக பகுதியில் கப்பலணையும் மேடை,
பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் (Detailed Project Report and Estimates) தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தங்கு தடையற்ற போக்குவரத்து
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை கையாளும் விதமாக, முதலமைச்சரின் “அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து திட்டம்” (Chief Minister All Season Uninterrupted Connectivity Scheme) என்ற முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் உயர் மட்ட பாலங்களாக 2026 ஆண்டிற்குள் கட்டப்படும் என 2021-2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
உயர்மட்ட பாலங்கள்
நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 29 மாவட்டங்களில் 200 தரைப்பாலங்கள் ரூ.300கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும். நபார்டு வங்கி கடனுதவியுடன் 20 மாவட்டங்களில் 73 தரைப்பாலங்கள் ரூ.487கோடி மதிப்பில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும்.
5 லட்சம் மரக்கன்றுகள்
“பசுமையான சாலைகள் மற்றும் பாதுகாப்பான பயணத்தை” வழங்குவது இத்துறையின் குறிக்கோளாகும். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த ஆண்டு அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும்.மேலும் சாலை ஓரங்களில் உள்ள உயரமான பகுதிகளில் மண் அரிப்பை தவிர்க்கும் பொருட்டு பனை விதைகள் ஊன்றப்படும்.
நிரந்தர அலைபேசி எண்
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு நெருக்கமான பயனர் குழு (CUG) முறையில் நிரந்தர அலைபேசி எண் வழங்கப்பட்டு அந்த எண் வாயிலாக எந்தவொரு அலுவலரையும் எளிதில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்படும்.