இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராம நவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கிணறு மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் மீது யாகம் நடைபெற்றது. அதைச்சுற்றி ஏராளமான பக்தர்கள் அமர்ந்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீ ரென அந்த சிலாப் உடைந்ததுடன் பக்கவாட்டு சுவரும் இடிந்து விழந்தது. இதனால் சுமார் 50 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் பலர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் மீட்புப்பணி தொடர்ந்தது. இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 304-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் நகர காவல் ஆணையர் மக்ரந்த் தியோஸ்கர் தெரிவித்துள்ளார்.