சென்னை: திருவள்ளூரில் செல்போன் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூரைச் சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருவள்ளூர் மாவட்டம் மோரையை அடுத்த பூரணி நகர் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியை சுற்றி ஏராளமான குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசித்து வருவதால் செல்போன் கதிர்வீச்சினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு, செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கும் முன் கண்டிப்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். ஆனால் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தாமல் அமைதி கூட்டத்தை தாசில்தார் நடத்தினார். நீதிமன்ற உத்தரவை மீறி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல், செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் அரசு பீளிடர் முத்துக்குமார் ஆஜராகி, செல்போன் கோபுரம் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படிதான் இந்த செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்