இட்லி தென்னிந்தியர்களின் பிரதான காலை உணவாக இருந்து வருகிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில்கூட இட்லி பிரபலமாக இருக்கிறது.
உலக இட்லி தினத்தையொட்டி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி கடந்த ஓர் ஆண்டில் எங்கு அதிக அளவு இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில் இட்லி அதிகம் ஆர்டர் செய்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமிருக்கும் இங்கேதான் மக்கள் அதிக அளவு இட்லியை ஆன்லைனில் வாங்கியிருக்கின்றனர். இதில் இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் இருக்கிறது. அதோடு ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மட்டும் தனக்கும், தன் நண்பர்களுக்கும் ஆறு லட்சம் ரூபாய்க்கு 8,428 பிளேட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.
இட்லியை ஆன்லைனில் ஆர்டர் செய்வதில் சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதுவும் காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை இட்லியை ஆர்டர் செய்வதில் சென்னை மக்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். பெங்களூரில் ரவா இட்லி அதிக அளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் நெய், பொடியுடன் கூடிய இட்லி அதிக அளவில் விரும்பி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ஸ்வக்கியில் 33 மில்லியன் பிளேட் இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை உணவாக அதிகமாக மசாலா தோசை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இட்லி இருக்கிறது. சிலர் இட்லியோடு சேர்த்து தேநீர், காபியும்கூட ஆர்டர் செய்துள்ளனர். இது தவிர மற்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் இட்லி டெலிவரி செய்திருக்கின்றன.