திருவள்ளூர் : பங்குனி உத்திர திருவிழாக்கு தற்காலிகமாக அமைக்கப்படும் சிறு கடைகளுக்கு வாடகை நிர்ணயித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் முதல் நிலை கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவரின் அந்த மனுவில், “பாடியநல்லூர் கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த தற்காலிக கடை உரிமையாளர்களிடம் கோவில் நிர்வாக கமிட்டி நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வாடகை வசூல் செய்ய உள்ளது.
அதே சமயத்தில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை பஞ்சாயத்து தான் வழங்குகிறது. எனவே, கடைகளுக்கான இந்த வாடகை தொகையை பஞ்சாயத்து நிர்வாகமே வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நாளொன்றுக்கு 5000 ரூபாய் வாடகையாக பஞ்சாயத்துக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வாடகையை வசூலிக்க கோயில் நிர்வாக கமிட்டிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முன்பு தமிழக அரசு தரப்பில், “கடந்த ஆண்டும் இதே கோரிக்கையுடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள வாடகை கட்டணம் குறைவுதான் என்று சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.