தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், புரோக்கர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அனைத்து பணிகளுக்கும் முக்கியமான பேப்பர் இருந்தால் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் புகார் வந்ததின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்ததில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், முதல்நிலை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் இதர அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்காக லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, முதல்நிலை ஆய்வாளர் சிவகுமார் கடந்த நவம்பரில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் விருதுநகர் வட்டார போக்குவரத்து அமலாக்கப்பிரிவுக்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டார். ஆனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து செந்தில்வேலன் பணி மாறிச்செல்லாமல் தொடர்ந்து தாம்பரம் அலுவலகத்திலேயே பணியில் தொடர்ந்தார். இந்நிலையில், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இரண்டாம் நிலை ஆய்வாளராக இருக்கும் சோமசுந்தரம் கடந்த 29ம் தேதி ஒரே நாளில் புதிய வாகன பதிவு, வாகன தகுதிச்சான்று, எல்எல்ஆர், பேட்ஜ், ரிவேல்யூ போன்ற சுமார் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து, 30ம் தேதி போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் மைதானத்தில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 29ம் தேதி வந்த விண்ணப்பங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து சென்றனர். இதை தொடர்ந்து, அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பணி மாறி செல்லாமல் தாம்பரம் அலுவலகத்திலேயே பணியில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலனை அலுவலகத்தில் இருந்து அதிரடியாக விடுவித்ததோடு, சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் யுவராஜிக்கு தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கினர். ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்த இரண்டாம் நிலை ஆய்வாளர் சோம சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அமலாக்க பிரிவில் பணியாற்றிய கார்த்திக் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக இரண்டாம் நிலை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.