புதுடில்லி, நாட்டின் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த அறிமுகமாக உள்ள, ‘இந்தியாவில் குணமடையுங்கள்; இந்தியாவால் குணமடையுங்கள்’ என்ற இணையதளத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த திட்டத்தின் வாயிலாக, மருத்துவத் துறையை மேம்படுத்தவும், சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு, 65 – 90 சதவீதம் வரை குறைவாக உள்ளது.
இதனால், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்காசிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து, ஏராளமான வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.
ஆயுர்வேதம்
இதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்த, ‘இந்தியாவில் குணமடையுங்கள்; இந்தியாவால் குணமடையுங்கள்’ என்ற இணையதளத்தை துவக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வெளிநாட்டினர் வந்து செல்வதற்கான ‘விசா’ நடைமுறைகள் எளிதாக்கப்பட உள்ளன.
இந்த இணையதளத்தில் மருத்துவமனைகள், சிகிச்சைக்காகும் மொத்த செலவு, நவீன, இயற்கை, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய சிகிச்சை முறைகள் குறித்த முழுமையான தகவல்கள் இருக்கும்.
இந்நிலையில், இந்தியாவில் குணமடையுங்கள்; இந்தியாவால் குணமடையுங்கள் என்ற அந்த இணையதளத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், எஸ்.இ.பி.சி., எனப்படும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் அபய் சின்ஹா கூறியதாவது:
ஏற்கனவே வேறு ஒரு திட்டத்திற்காக, மருத்துவமனைகள் பற்றிய தரவுகளை நாங்கள் சேகரித்து வைத்திருந்தோம்.
இந்த தரவுகளுடன், இந்தியாவில் குணமடையுங்கள்; இந்தியாவால் குணமடையுங்கள் இணையதளத்தில், வேறு முக்கிய அம்சங்களையும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைத்து வருகிறது.
மேலும், மருத்துவமனைகளில் இருந்து நேரடியாக பெற்ற தரவுகளை தொகுக்கும் பணியும் நடந்து வருகிறது.
நடவடிக்கை
தற்போது, இணையதளத்தின் துவக்க விழாவுக்காக காத்திருக்கிறோம். எஸ்.இ.பி.சி., – இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஒரு நிகழ்வில், இந்த இணையதளத்தின் துவக்க விழாவை நடத்த முடிவு செய்துஉள்ளோம்.
இந்த இணையதளத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கி, ஒரே குடையின் கீழ் அனைத்து வசதிகளும் வரும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘இந்தத் திட்டங்கள் வாயிலாக, உலகளவில் மருத்துவ சுற்றுலாவில், அசைக்க முடியாத இடத்தில் இந்தியா இருக்கும்’ என, தொழில் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.