சென்னை: சென்னையில் 2-வது தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சென்னைக்கு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் விவரம்:
> பல்லாவரம் மேம்பாலம் மற்றும் சென்னை புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் ரூ.1 கோடி விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
> சென்னையில் பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை போன்று உட்கட்டமைப்பு வசதிகளுடன், பல்லாவரம் – துரைப்பாக்கம் ஆரச்சாலையை அடுத்த தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலையாக மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
> சென்னை பெருநகர பகுதியில் நிரந்தர வெள்ளத்தடுப்பு கட்டமைப்பு பணிகள் ரூ.116 கோடியில் மேற்கொள்ளப்படும். இதில் தேவையான இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் கால்வாய் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பருவ மழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு பருவமழையின் போது மழை நீர் தேங்காத வகையில் மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.