ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு

ராஜபாளையம்: இந்தியா ரிஷிகளால், வேதங்களால் உருவானது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ராஜூக்கள் கல்லூரி 50வது ஆண்டு பொன்விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழுத்தலைவர் பிரகாஷ் வரவேற்றார்.  கவுரவ விருந்தினராக ராம்கோ நிறுவனங்களின் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பொன்விழா அறிவியல் வளாகம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கிய ஆர்.ராம்ஜி, பி.எம்.ராமராஜ், வி.ரவிக்குமார், பி.எஸ்.வேலாயுதராஜா, எல். சந்திரசேகரன், வியாஸ், ஓம் ராஜா. எஸ்.முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘இந்திய விடுதலைப் போராட்டத்தில் ராஜபாளையத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் மகத்துவமே அதன் ஆன்மிகம் தான். இந்தியா ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானது. எந்த ஒரு ராஜாக்களாலும் உருவாக்கப்படவில்லை. 2047ல் இந்தியாவை வல்லரசாகவும், தன்னிறைவு பெற்ற நாடாகவும் மாற்ற இன்றைய இளைஞர்களால் மட்டுமே முடியும். வரும் காலங்களில் ஒரு பூமி, ஒரு கிரகம், ஒரு குடும்பமாக மாறும். அதில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும். இதைத்தான் தமிழ் புலவர் அன்றே ‘யாதும் ஊரே யாரும் கேளிர்’ என்று கூறினார்’’ என்றார்.

* கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கட்சியினர் 78 பேர் கைது. கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெழுத்து போடாததைக் கண்டித்தும், ராஜபாளையம் வந்த ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தினர். காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நேற்று கருப்புக் கொடி காட்ட குவிந்திருந்த அக்கட்சியினரை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியை சேர்ந்த 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.