புதுடில்லி :பழைய முறைப்படி ‘ஹால்மார்க்’ முத்திரை பெற்ற தங்க நகை மற்றும் பொருட்களை விற்காமல் உள்ள 16 ஆயிரம் நகைக்கடைக்காரர்களுக்கு மட்டும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி, பழைய நகைகளை விற்பனை செய்து கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, தங்கம் மற்றும் தங்கத்தாலான பொருட்களுக்கு 6 இலக்க புதிய பி.ஐ.எஸ்., ஹால்மார்க் தர நிர்ணய முத்திரையுடன் மட்டுமே தங்க நகைகள் மற்றும் தங்கத்தினாலான பொருட்களை விற்க வேண்டும் என, மத்திய அரசு ஆணையிட்டிருந்தது.
விற்றுக் கொள்ள அனுமதி
இந்நிலையில், தற்போது மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம், அரசிதழில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, அனைத்து தங்க பொருட்களுக்கும் 6 இலக்க பி.எஸ்.ஐ., ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என ஆணை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் மற்றும் நகைக்கடைகாரர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கடந்த 2021 ஜூலைக்கு முன்பாக, பழைய முறைப்படி ஹால்மார்க் முத்திரை பெற்ற நகைகளை விற்பனை செய்து கொள்ள, 16ஆயிரம் நகைக் கடைக்காரர்களுக்கு, மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இதன்படி, வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை இந்த கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கால வரம்பிற்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நகைக்கடைக்காரர்கள், தங்களின் கையிருப்பை விற்றுக் கொள்ள அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் துறை கூடுதல் செயலர் நிதி கரே கூறியதாவது: நாடு முழுவதும் 1.56 லட்சம் பதிவு பெற்ற நகைக் கடைகள் உள்ளன. இவர்களில் 16 ஆயிரத்து, 243 நகைக் கடைக்காரர்கள், இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் தங்களது பழைய ஹால் மார்க் முத்திரை பெற்ற நகைகளை விற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீட்டிப்பு இல்லை
இந்த அனுமதி 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி அவகாசம். இதன் பிறகு, கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
இந்த அனுமதி அளிக்கப்பட்ட நகைக்கடைகள் தவிர, மீதமுள்ள பதிவு பெற்ற நகைக்கடைகள், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, 6 இலக்க ஹால்மார்க் முத்திரையுடன் மட்டுமே தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement