வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் சிலர் மகளிர் குழுவினருக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் உதவி அளிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள பெண்களின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசாரும் வருவாய்த்துறையினரும், விவரங்களை சேகரித்து கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் சேலம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என்றும் தாங்கள் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்குவதாகவும், இதன் காரணமாகவே விவரங்களை சேகரித்து வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை. முறையான ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றுதான் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று அவர்களை எச்சரித்து அனுப்பினர்.