சென்னை: உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் குடும்பங்களுக்கு குறைந்தவிலையில் அதிவேக இணைய சேவைகளை ரூ.100 கோடி செலவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைமானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, துறையின் அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசியதாவது:
சென்னை, ஓசூர், கோவையில் உலகத் தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டி வரவுள்ளது. பார்த் நெட் திட்டம் 48 ஆயிரம் கிமீ இருந்து 57 ஆயிரம் கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு கேபிள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் ஹெச்டி பாக்ஸுக்கு மாறியுள்ளது. சந்தையில் நிலவும்மிகப் பெரிய போட்டியால் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மைதான். ஹெச்டி பாக்ஸ்களைவழங்கி மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சோழிங்கநல்லூர் எல்கோசெஸில் ரூ.20 கோடி செலவில் எல்காட் நிறுவனத்தின் சொந்த நிதியில் இருந்து நடைபாதை மற்றும் சைக்கிள் பாதை வசதிகளுடன் கூடிய பசுமைப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம்மாநில முழுவதும் 8 எல்கோசெஸ்களை உருவாக்கியுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை ரூ.40 கோடியில் சர்வதேச தரத்துக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நலத்திட்ட பயனாளிகளுக்கான நேரடி பயன் பரிமாற்றத்தளம் ரூ.1.72 கோடியில் உருவாக்கப்படும். தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்கான ஒற்றைநுழைவுதளம் ரூ.11 கோடியில் செயல்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டில் கூடுதலாக 100 புதிய சேவைகள் ரூ.1.20 கோடி செலவில் இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 20 ஆயிரம் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நம்பகமான அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பை வழங்க ரூ.184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக குறைந்த விலையில் நம்பகமான அதிவேக இணைய சேவைகளை ரூ.100 கோடி செலவில் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.