உலக அளவில் சுவை மிகுந்த திராட்சை விளையும் பகுதி என்ற பெருமையை தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பெயர் பெற்று வருகிறது. உலக அளவில் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே திராட்சை கிடைத்து வருகிறது. இந்த திராட்சைகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யப்படும் நிலையில் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டிற்கு மூன்று முறை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது.
மேகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கில் மண்வளம், மழை வளம் மற்றும் சீதோசன நிலைக்கு சாதகமாக உள்ளதால் கம்பம் பன்னீர் திராட்சை சுவை மிகுந்ததாக அறியப்படுகிறது. குறிப்பாக சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்குமுத்தன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் திராட்சை விவசாயிகள் கம்பம் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறிக்குப்பின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேனி பன்னீர் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள் “பன்னீர் திராட்சைக்கு புவி சார்பில் குறியீடு கிடைத்திருப்பது மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம். இதனால் பன்னீர் திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும். இதனால் உலக அளவில் பன்னீர் திராட்சையின் ஏற்றுமதி அதிகரிக்கும்” என பன்னீர் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.