சென்னை: Vetrimaaran Met Ilayaraja (இளையராஜாவை சந்தித்த வெற்றிமாறன்) விடுதலை படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக அசுரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக அவர் விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார்.
வெற்றிமாறனின் விடுதலை
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையிலிருந்து தீமை எடுத்துக்கொண்டு விடுதலை படத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன் இதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸானது. வெற்றிமாறனின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது.
படத்துக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ்
தனது படைப்புகள் மூலம் ஆரோக்கியமான உரையாடலை சமூகத்தில் கிளப்புபவர் வெற்றிமாறன். வெக்கை நாவலில் இருந்து அசுரன் உருவானாலும் அந்தப் படத்தின் மூலம் பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தொடங்கிவைத்தார். அதேபோல்தான் விடுதலை படத்தின் மூலம் காவல் துறையின் கோர முகத்தை இன்னொருமுறை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் வெற்றி என்ற கருத்து எழுந்திருக்கிறது.
சூரியின் செம நடிப்பு
பெரிய ஹீரோக்களை நோக்கி ஓடும் இயக்குநர்கள் மத்தியில் வெற்றிமாறன் தனித்துவமானவர் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை இந்தப் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்கு நியாயம் செய்யும் விதமாக சூரியும் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படம் சூரிக்கும் மிகப்பெரிய அடையாளம் என புகழ்ந்துவருகின்றனர்.
இளையராஜாவின் இசை
இதுவரை ஜிவி பிரகாஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி வைத்த வெற்றிமாறன் விடுதலையில் முதல்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். படத்தின் பல இடங்களில் இளையராஜாவின் இசை மெய் சிலிர்க்க வைப்பதாக ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். அதேபோல் படத்தின் பாடல்களும் தாலாட்டும் உணர்வை கொடுப்பதாக தெரிவித்துவருகின்றனர்.
இளையராஜாவுக்கு நன்றி
இந்நிலையில் விடுதலை படத்தின் மேக்கிங்கிற்கும், இளையராஜாவின் இசைக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது. இதனையடுத்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோ இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
வெற்றிமாறனின் பரிசு
முன்னதாக, விடுதலை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த வெற்றியை தனது படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் வெற்றிமாறன். அதன்படி, படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்கக் காசு பரிசளித்தார்,. அதேபோல் படத்தின் ரிலீஸுக்கு முன்பு உதவி இயக்குநர்களுக்கு நிலத்தை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.