சென்னை: தமிழகத்தில் வெயில் நெருப்பாக சுட்டெரித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்க்காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இந்த திடீர் க்ளைமெட் மாற்றத்துக்கு காரணம் சொல்லியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இந்த செய்தி காதுகளில் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறது.
அனல் கக்கும் வெயில்
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கோடை வெயில், அளவுக்கு அதிகமாக அனலை கக்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, எப்போதுமே கோடை வெயில் மார்ச் முதல் வாரத்தில் இருந்துதான் தனது வீரியத்தை காட்ட தொடங்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. தற்போது ஏப்ரல் மாதம் என்பதால் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் மண்டையை பிளந்து வருகிறது.
வெயில் அதிகரிக்கும்
குறிப்பாக, சென்னை, வேலூர், ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. ஈரோடு, நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போதே பல மாவட்டங்களில் காலை 10 மணிக்கே பகல் 12 மணி போல வெயிலின் தாக்கம் இருக்கிறது. இந்த சூழலில், இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கப் போவதை எண்ணி மக்கள் கலக்கமடைந்து உள்ளனர்.
குட் நியூஸ்
இந்த நிலையில்தான், ஒரு ஹேப்பி நியூஸை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெள்ளுத்து வாங்க போகிறது என்பதுதான் அந்த குட் நியூஸ். அதன் அறிகுறியாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்தபடியும், குளிக்காற்று வீசியபடியும் இருக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் காற்று வீசும் இடங்களில் இந்த சுழற்சி ஏற்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கபோகும் கனமழை..
இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும். ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருப்பூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்யும். இதே மாவட்டங்களில் வரும் 5-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் சுற்றுப்பகுதிகளிலும் சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்படுகிறது.