சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் அறிவித்தபடி, கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை இருந்த சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, 2 சதவீதம் பதிவுக் கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
சட்டப்பேரவையில் மார்ச் 20-ம்தேதி, தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘‘2012 ஏப்.1-ம் தேதி உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் 9-ம் தேதி முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. விற்பனை, நன்கொடை, பரிமாற்றம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக்கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும் பதிவுக்கட்டணத்தை குறைக்கவும் பல்வறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்ததால், வழிகாட்டி மதிப்பை திருத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நில அளவைஎண் வாரியாக திருத்தம் செய்யகால அவகாசம் தேவைப்படும். வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதால், குழுவின் அறிக்கை பெறும்வரை வழிகாட்டி மதிப்பை கடந்த2017 ஜூன் 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4 லிருந்து 2 சதவீதமாக குறைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது’’ என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு நேற்று (ஏப்.1) அமலுக்கு வந்தது.
சந்தை வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்து பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 30-ம்தேதி நடைபெற்ற, மதிப்பீட்டுக் குழுவில், 2017 ஜூன் 8 ம் தேதி வரைகடைபிடிக்கப்பட்டு வந்த சந்தைவழிகாட்டி மதிப்புக்கு ஈடாக வழிகாட்டி மதிப்பை மாற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஏப்.1 முதல் வழிகாட்டி மதிப்பை 2017 ஜூன் 8 வரை கடைபிடிக்கப்பட்ட சந்தை வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக தற்போதைய வழிகாட்டி மதிப்பை மாற்ற வேண்டும்.
இந்த மாற்றப்பட்ட சந்தை மதிப்புவழிகாட்டி தமிழகம் முழுவதும்உள்ள 54 பதிவு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து கிராமப் புலஎண்கள் மற்றும் தெருக்கள், நகர்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இம்மதிப்புகள் ஏப்.1 முதல் மாற்றம்செய்யப்படுகிறது. 2017 ஜூன் 9 அல்லது அதற்கு பிறகு விளைநிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டிருந்தால், நிர்ணயிக்கப்பட்ட மனைமதிப்பு ஜூன் 8-ல் இருந்த மதிப்புடன் ஒப்புநோக்கப்பட்டு, அதில் எது அதிகமோஅதனை வழிகாட்டி மதிப்பாக கொள்ள வேண்டும். இதனை சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும்.
பதிவுக்கட்டணத்தை பொறுத்தவரை, சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு 2017 ஜூன் 8 வரைகடைபிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்றுவரி மற்றும் 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் அல்லாத ஏற்பாடு ஆவணத்துக்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.