சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய அரசின் நிதியுதவி உடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய வேண்டும் என்று மாணவிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கலாஷேத்ராவில் பகீர்
தவறு செய்தவர்களை கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்றுவதாகவும், நடனத் துறை தலைவர் ஜோஸ்லின் மேனன் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தமிழக போலீசார், மகளிர் ஆணையம் என அடுத்தடுத்து விசாரணையில் இறங்கினர்.
மாணவிகள் புகார்
குறிப்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி அவர்களிடம் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அதில், தங்களுக்கு சிலர் மிரட்டல் விடுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் விஷயம் மிகவும் சீரியஸாக மாறியுள்ளது. இதற்கிடையில் வரும் 6ஆம் தேதி வரை கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவு
பாலியல் தொல்லை விவகாரம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் மாணவிகளின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கல்லூரியில் ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பேராசிரியர் ஹரி பத்மன்
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹரி பத்மனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை திரும்பினார்
இதுபற்றி விசாரிக்கையில் கடந்த 30ஆம் தேதி மாணவ, மாணவிகள் உடன் ஹைதராபாத் நகருக்கு பேராசிரியர் ஹரி பத்மன் சென்றார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து விட்டு சென்னை திரும்பினார். அதன்பிறகு எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. இதனால் ஹரி பத்மனை தீவிரமாக தேடுவதற்கு போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஜாமீன் மனு
ஹைதராபாத்தில் இருந்து ஹரி பத்மன் சென்னை வரும் விமானம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலா இருந்திருக்கும். அப்புறம் ஏன் நேரில் சென்று விசாரணைக்கு அழைத்து வரவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை முன் ஜாமீன் கேட்டு ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறாரா? ஜாமீன் கிடைத்ததும் வெளியே தலைகாட்ட திட்டமிட்டுள்ளாரா? போன்ற கேள்விகள் எழுகின்றன.