திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் பெண் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்து காட்சியும், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுபுழல்பட்டியை சேர்ந்த விஜயா, அவரது மகன் வேலு ஆகியோர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி இடித்ததால் வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்த நிலையில், லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் விஜயா சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயம் அடைந்த வேலு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நேர்ந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் உதவி ஏதும் செய்யாமல் வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து குறித்து, சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.