இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் இந்தியா முழுவதும் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. நேற்று 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசல பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து 3 இலக்கங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கோவை மாவட்டத்தில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.